



அவர் பால்ய நண்பரோ
பள்ளி / கல்லூரி தோழரோ இல்லையென்றாலும்-
பழகிய சிநேகிதர்.
பல்பொருள் அங்காடியில்
பற்பசை பிரிவில் இருந்த நான்
அடுத்தவர்க்கு இம்சையில்லாமல்
கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது -
அவர் இருந்த
ஊறுகாய் பிரிவு.
இரவு பத்து மணிக்கு
பதினைந்து நிமிடங்கள்!
கடை அடைக்க போவதாகவும்
கவுண்டருக்கு உடனே வரச்சொல்லியும்
ஒலிபெருக்கி எச்சரிக்கைகள்!
மனைவி கொடுத்த பட்டியலில்
பாதிதான் தேடி முடிந்திருக்கிறது -
இதற்கிடையில்
நட்பாவது, நார்தங்கயாவது!
அவர் என்னை பார்த்த இமைக்கும் நேரத்திற்கும்
இடைப்பட்ட நேரத்திற்குள் -
பற்பசை அட்டையில் காலாவதி தேதியை
கூர்ந்து பார்ப்பதாக பாசாங்கு செய்ய -
அவரும் கூப்பிடவில்லை!
நல்ல வேலை
நான் பார்க்கவில்லை - அவர்
நடையில் தெரிந்த சந்தோசம்!
பாவம்-
அவர் கையிலும் ஒரு பட்டியல் இருந்தது!
![]() |
Namma Madurai |