Tuesday, August 17, 2010

நினைவுகள்...

மலை அடிவாரத்தை ஒட்டியிருந்த
பரந்த பச்சைவெளி பிரதேசத்தை
திடீரென்று
கூவிக் கிழித்தோடியது
நீலவண்ணம் பூசிய இரயில் வண்டியொன்று.

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரும்
ஒரு சாதாரண சாயங்கால பொழுதினில்
தடாலடியாய் நினைவில் வரும் உன்
கத்தரிப் பூப்போட்ட பாவடையும்,
வெள்ளைத் தாவணி முனையில்
நீ லாவகமாய் துடைத்தெடுக்கும்
உன் முன் நெற்றி வியர்வைத் துளிகளையும் போல்!

----------------

ஒரு விடிகாலை பயணத்தில்
கார்க்கண்ணாடி வழிதெரிகின்ற
கொடி படர்ந்த அடர்ந்த மரங்கள் மற்றும்
மலை உச்சியிலிருந்து
ஒற்றை வெள்ளை கோடாய் விழும் சிற்றருவி
சந்தோசமாய் சிறகடிக்கும் சோடிப் பறவை

இப்படியாய்
இத்தனை வருடங்கள் கழிந்த பின்பும்
நான் மட்டுமே
என்னோடு இருக்க நேரிடும் தருணங்களில் -
உன் நினைவு
வரமால் போய் விடுகிறதா என்ன?

Thursday, August 12, 2010

முக நக

அவர் பால்ய நண்பரோ

பள்ளி / கல்லூரி தோழரோ இல்லையென்றாலும்-

பழகிய சிநேகிதர்.

பல்பொருள் அங்காடியில்

பற்பசை பிரிவில் இருந்த நான்

அடுத்தவர்க்கு இம்சையில்லாமல்

கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது -

அவர் இருந்த

ஊறுகாய் பிரிவு.

இரவு பத்து மணிக்கு

பதினைந்து நிமிடங்கள்!

கடை அடைக்க போவதாகவும்

கவுண்டருக்கு உடனே வரச்சொல்லியும்

ஒலிபெருக்கி எச்சரிக்கைகள்!


மனைவி கொடுத்த பட்டியலில்

பாதிதான் தேடி முடிந்திருக்கிறது -

இதற்கிடையில்

நட்பாவது, நார்தங்கயாவது!


அவர் என்னை பார்த்த இமைக்கும் நேரத்திற்கும்

இடைப்பட்ட நேரத்திற்குள் -

பற்பசை அட்டையில் காலாவதி தேதியை

கூர்ந்து பார்ப்பதாக பாசாங்கு செய்ய -

அவரும் கூப்பிடவில்லை!

நல்ல வேலை

நான் பார்க்கவில்லை - அவர்

நடையில் தெரிந்த சந்தோசம்!

பாவம்-

அவர் கையிலும் ஒரு பட்டியல் இருந்தது!