Tuesday, April 14, 2009

கனவை, கனவால் கொல்...

அடர்ந்த இருள்வெளியில்
எதையோப் பற்றிக்கொண்டு
எதன்மேலோ தொற்றிக்கொண்டு
பார்முலா ஒன் வேகத்தில் இதயம் துடிக்க-

பொருளாதாரப் பின்னடைவு
ஆட்குறைப்பு, ஒபாமா......

இது பாறையா, மரமா?
இந்த நிகழ்வு எனக்குப புதிதா?
இதற்கு முன்னர் நேர்த்திருக்கிறதா ?

கையில் பிடித்திருந்த ஏதோ ஒன்று
மரக்கிளையோ பாறைத்துண்டோ
கைநழுவி விழுந்து சிதறிய சத்தம்
வினாடிகள் பல கடந்து செவி தட்ட

தாலிபான், இனப்படுகொலைகள்,
பங்கு சந்தை, ரிஷேஷன்......

வியர்த்த கைகள் மெதுவாய் பிடிதளர்த்த
இந்த பாறையோ மரமோ மலையோ
என்ன எழவோ-
என்ன செய்ய வேண்டும் இப்போது?
இதை ஏற வேண்டுமா இதில் இறங்க வேண்டுமா?

அலறி விழித்த படுக்கை விரிப்பில்
இது விடிகாலை கனவா?
இரவு இன்னும் மிச்சம் இருக்கிறதா?

எத்தனை மணி?

எத்தனை ஆனால் என்ன
இழுத்திப் போர்த்தி
இறைவனைவேண்டி இன்னும் தூங்கு.

அடுத்த கனவாவது
நல்லதாய் வாய்க்கட்டும்.....










Saturday, April 11, 2009

என் கவிதை என்னிடமே இருக்கட்டும்...

நீ
உனக்காக எழுதிய
உன்னுடைய கவிதையை
உன்னிடமே வைத்துக்கொள்.

என்னிடம்
நான் எனக்காக எழுதிய கவிதை
இன்னும் யாராலும் படிக்கப்படாமல்

அப்படியே
கற்போடு இருக்கிறது.

நீ
இதை படிக்க வேண்டுமென்ற
கட்டாயமில்லை.

எழுதியவன் சொல்லவந்ததை
படிப்பவன் -
தவறாகப் புரிந்துகொண்டால் கூட
கவிதை கற்பிழந்து விடுகிறது...

என் கவிதை
என்னிடமே இருக்கட்டும்...